கோவை: போராட்ட அறிவிப்பால் ஆசிரமம் முன்பு போலீஸ் பாதுகாப்பு
- தனியார் ஆசிரமத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மொட்டையடிக்கப்பட்டது
- 2 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
வடவள்ளி, ஜூலை.26-
கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் கோவை அருகே தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூர் தாசில்தார் இந்துமதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த காப்பக நிர்வாகி ஜிபின் பேபி (வயது 44), பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (43), சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), அருண் (36), தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜார்க் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மாரியம்மன் கோவில் மைதானத்திலும், அட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் ஆசிரமம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு போராட்டக்காரர்கள் யாரும் நுழையாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.