தென்காசியில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணை- கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்
- மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
- குறைதீர் கூட்டத்தில் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவியாக தலா ரூ.17ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பணிகாலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் இந்தக் குறைதீர் கூட்டத்தில் 855 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் கலால் ராஜமனோகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.