உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2024-07-21 07:34 GMT   |   Update On 2024-07-21 07:34 GMT
  • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
  • குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதைத்தொடர்ந்து பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்தும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வன அலுவலர் ரவி மீனா,வேளாண்மை இணை இயக்குநர் (பொ)ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News