ஆடி அமாவாசைக்கு தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை-கலெக்டர் விஷ்ணு பேட்டி
- நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொணடார்.
நெல்லை:
பாளையில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் நெல்லை நீர்வளம் சார்பில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 1200 நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடக்கும் திருவிழா, முக்கிய நிகழ்வுகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை, சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக சப்-கலெக்டர் ரிஷாப், மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வனத்துறை, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட உள்ளனர்.
எனவே ஆடி அமாவாசை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஆடி அமாவாசைக்கு தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் கொடுப்பவர்கள், பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகளை கொண்டு வர வேண்டும். அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சப்-கலெக்டர் சந்திரசேகர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.