கல்லூரி மாணவியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் உடல் வீச்சு- வாலிபரிடம் போலீசார் விசாரணை
- மாணவி ஸ்வேதாவின் செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மாணவி ஸ்வேதாவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று தெரிய வந்தது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு கண்ணகி வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகனும், ஸ்வேதா (21) என்ற மகளும் உள்ளனர்.
ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 28-ந்தேதி காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை 5 மணிக்கு தனது தாயிடம் தான் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வந்து விட்டதாக கூறி உள்ளார்.
ஆனால் இரவு 7 மணி ஆகியும் ஸ்வேதா வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர் மற்றும் மாணவியின் தோழிகள் மற்றும் தெரிந்த இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவியை காணவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார்.
இந்த தோட்டத்தில் 75 அடி ஆழம் உள்ள ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.
அப்போது கிணற்றில் கிடந்த ஒரு வெள்ளை நிற உர மூட்டை சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்த சாக்கு பையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது சாக்கு பையை பிரித்து பார்த்தபோது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கழுத்து மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டு கிணற்றில் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட பெண் மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து கொலை செய்யப்பட்டது ஸ்வேதாதான் என்று உறுதி செய்தனர்.
இதையடுத்து ஸ்வேதாவின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவி கொலை குறித்து விசாரணை நடத்த பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவி ஸ்வேதா படித்து வந்த கல்லூரியில் இருந்து அவர் இறந்து கிடந்த கொங்கர்பாளையம் 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே மாணவியை தெரிந்த நபர்கள்தான் யாராவது அழைத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்து பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என்று தெரிய வ்ந்தது.
மேலும் மாணவி ஸ்வேதாவின் செல்போன் எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக ஸ்வேதாவிடம் ஒரு வாலிபர் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர் மாணவி ஸ்வேதாவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று தெரிய வந்தது. மேலும் மாணவி கொலைக்கும் இவருக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர கொலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மாணவி கொலை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மாணவியுடன் கடைசியாக பேசிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் மாணவி கொலையில் அவருக்கு தொடர்பு இருக்குமா? என்று தெரிய வரும். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.