காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்
- ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா.
- இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, இரவு சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார்.
5-ம் நாள்விழாவான வருகிற 11-ந்தேதி காலை அதிகார நந்தி சேவை உற்சவம், இரவு மருகுவார்குழலி அம்பிகையுடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார்.
இரவு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 13-ந்தேதி திருத்தேர் உற்சவமும், 16 -ந்தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
19-ந்தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.