பாளையில் 13 பவுன் நகை பறித்ததாக புகார்- மகனை சிக்க வைக்க போலீஸ்காரர் மனைவி நாடகமாடியது அம்பலம்
- சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
- ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
பாளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மாதாய் என்ற ஜான்சி (வயது 38). இவரது கணவர் சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சி தனது 17 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மொபட்டில் ஜான்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் தாய்-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் ஜான்சியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை சிக்க வைக்க போலீசில் பொய் புகார் அளித்ததாகவும் ஜான்சி போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீ சார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.