உள்ளூர் செய்திகள்

பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் அமர்ந்திருப்பதாக புகார்

Published On 2024-09-12 06:50 GMT   |   Update On 2024-09-12 06:50 GMT
  • எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென ஆய்வு.
  • உடனடியாக படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம்:

காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்.எல்.ஏ. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

அப்போது எழிலரசன் எம்.எல்.ஏ. கூறும்போது, இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்து புதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News