உள்ளூர் செய்திகள்

கடலூரில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

Published On 2023-03-11 03:06 GMT   |   Update On 2023-03-11 03:06 GMT
  • கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
  • கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

வடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.

கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.

மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News