தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் -பழங்குடியினர் 1950 பேருக்கு கணினி பட்டா- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 1 விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் சுமார் 1,404 மாணவிகளும், 1,453 மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் மிகவும் தரமான உணவு வகைகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கென உறைவிடமும் சுகாதாரமான முறையில் பாராமரிக்கப்படுகிறது. தொடர் தணிக்கை செய்து விடுதிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட வகை செய்வதோடு, முதல்-அமைச்சரே விடுதிகளை தணிக்கை செய்கிறார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் எவரேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குடும்பத்தாருக்கு அவர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமலிருக்க அரசால் உடனடியாக தீருதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காகித வடிவில் வழங்கப்பட்டு வந்த வீட்டுமனைப்பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டாவாக மாற்றம் செய்து கணினி பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் சீரிய முயற்சியில் தமிழகம் ழுமுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
தையல் எந்திரம் இயக்க தெரிந்த சான்று பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை நமது மாவட்டத்தில் பல நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.