உள்ளூர் செய்திகள்

கல்லணை தொடக்கப்பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்களை படத்தில் காணலாம்.

இடவசதி இல்லாததை கண்டித்து கல்லணை தொடக்கப்பள்ளி முன்பு மாணவர்கள்-பெற்றோர்கள் மறியல்

Published On 2022-06-24 09:34 GMT   |   Update On 2022-06-24 09:34 GMT
  • சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
  • 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெல்லை:

நெல்லை டவுன் பெருமாள் கீழரதவீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி (கல்லணை) இயங்கி வருகிறது.

இங்கு கடந்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 400 மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

இதனால் பள்ளியில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

மேலும் கல்லணை பள்ளியில் சத்துணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து பாரதியார் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதியார் உயர்நிலைப்பள்ளியில் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதாகவும், கல்லணை பள்ளி மாணவர்கள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அங்கு அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை எனவும் கூறி கடந்த 21-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் 2 நாட்களுக்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கல்லணை தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து இன்று அங்கு பயிலும் மாணவ -மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் கூறுகையில், கல்லணை பள்ளி அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. அங்கு மாணவ-மாணவிகளை அமர வைத்து வகுப்புகளை நடத்தலாம். ஆனால் அதைச்செய்யாமல் போதிய வசதி இல்லாத பாரதியார் உயர்நிலை பள்ளிக்கு மாணவர்களை இடமாற்றம் செய்துள்ளதால் அவர்கள் அவதிப்படுகிறார்கள் என்றனர்.

சம்பவ இடத்திற்கு மண்டல உதவி கமிஷனர் பைஜூ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் உதவிகமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வருகிற திங்கட்கிழமைக்குள் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி பள்ளியில் போதிய இடவசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News