ஊட்டி படகு இல்லத்தில் தொங்கு பாலம் அமைக்கும் பணி தீவிரம்
- சுற்றுலா பயணிகள் கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது.
ஊட்டி,
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முனை, பைக்காரா படகு இல்லம் மற்றும் பைக்காரா நீர் வீழ்ச்சி, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். பல்வேறு சாகச விளையாட்டுக்கள் அடங்கிய கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சுற்றுலாத்துறையும் புதிதாக சுற்றுலா தலங்களை உருவாக்கவும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் சாகச விளையாட்டுக்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. இதன் ஒருபகுதியாக படகு இல்லத்தில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளமும், 120 மீட்டர் உயரமும் கொண்ட தொங்கு பாலம் அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு மாத காலத்தில் முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த பணிகள் முடிந்து இந்த தொங்கு பாலம் திறக்கபட்டால் அது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும். இதன் மேல் இருந்து படகு இல்லத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம்.