புளியங்குடியில் மார்க்கெட் கடைகள் கட்டுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம்
- 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
- மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
புளியங்குடி:
புளியங்குடியின் மையப்பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.
புதிய கடைகள் கட்டும் வரை தற்காலிகமாக அரசு மருத்துவமனை அருகில் இயங்கி வந்தது. 5 ஆண்டுகள் கடந்தும் கடைகள் கட்டப்படாததால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்தநிலையில் நகர்மன்ற கூட்டத்தில் இடிக்கப்பட்ட காந்தி மார்க்கெட் பழைய இடத்தில் கட்டுவதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பழைய இடத்திலேயே மார்க்கெட் கட்டுமான பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்க நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன், தி.மு.க. நகர செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான அந்தோணிசாமி, மார்க்கெட் வியாபாரிகள், நகர வர்த்தக சங்கத்தினர், கவுன்சிலர்கள் அரசியல் பிரமுகர்கள், சமூகஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் பழைய இடத்திலயே கடைகள் கட்டப்பட வேண்டும். மேலும் இது நகரின் மைய பகுதியில் இருப்பதால் அனைத்து பகுதி மக்களும், வெளியூர் மக்களும் வந்து செல்ல ஏற்ற இடம் என்று பல்வேறு காரணங்களை எடுத்து கூறினர்.
பின்னர் பேசிய மாவட்ட கலெக்டர் உங்கள் அனைவரின் கோரிக்கைகளும் அரசுக்கு எடுத்து சொல்லப்படும். அனைவரின் விருப்படியே பழைய இடத்தில் கடைகள் கட்டுவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் குமார் சிங், பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, மானேஜர் செந்தில் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.