குன்னூர் எடப்பள்ளி ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
- எடப்பள்ளி ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது எடப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு எடப்பள்ளி ஊராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை தலைவர் கோபால் ராஜ் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் 9 வது வார்டு உறுப்பினர் சுசிலா பேசுகையில், அனைத்து நலத்திட்டங்களும் எடப்பள்ளி பகுதியில் செய்து வருகின்றனர். அளக்கரை பகுதியில் நலத்திட்டங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த தலைவர் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
4 -வது வார்டு உறுப்பினர் பரத் பேசுகையில்,அளக்கரை ஹட்டி பகுதியில் குடிநீர், மின் இணைப்புகள் என 70 ஆயிரம் மதிப்பில் சொந்த செலவில் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் வரவில்லை என்றார். அதற்கு பதில் அளித்த தலைவர் வட்டார வள அலுவலரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இளித்தொரை 5 ஆவது வார்டு உறுப்பினர் தேவராஜ் பேசுகையில் இளித்தொரை பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இளித்தொரை மைதானம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். இளித்தொரை பகுதியில் புதிய மோட்டார் அறை அமைக்கப்படும். எடப்பள்ளி ஆரக்கம்பை, அளக்கரை காலணி உள்ளிட்ட இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். பெள்ளட்டி மட்டம் தரை மட்ட நீர் தேக்க தொட்டி பழுது பார்த்தல் உள்ள பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.