மின் இணைப்பை துண்டிக்க நுகர்வோர் கோர்ட்டு தடை
- அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
- இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேலம்:
சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.
அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.