மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சின்கோனா 64
சின்னக்கல்லார்-93
வால்பாறை 72
வால்பாறை தாலுகா-69
சிறுவாணி அடிவாரம்-63