உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டம் முழுவதும் மழை நீடிப்பு - மயிலாடியில் 69.2 மி.மீ. பதிவு - ரப்பர், செங்கல் உற்பத்தி பாதிப்பு

Published On 2022-11-03 07:34 GMT   |   Update On 2022-11-03 07:59 GMT
  • நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

தக்கலை, களியக்காவிளை, குழித்துறை, இரணி யல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆறு கோதை ஆறு பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோரப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.70 அடியாக இருந்தது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது.அணைக்கு 1136 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1020 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 12.86 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 21.6 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்து றையாறு நீர்மட்டம் 38.71 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.தோவாளை செண்பகராமன்புதூர் தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த செங்கல்களும் மழையில் சேதம் அடைந்து உள்ளது. தொடர்மழையின் காரணமாக செங்கல் சூளை தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

கீரிப்பாறை தடிக்காரன்கோணம் குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு பெய்த மழைக்கு கம்பளம் பகுதியில் வீடு வந்து இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிபாறை-53.8, பெருஞ்சாணி-20, சிற்றார்-1-6.2, சிற்றார்-2-21.6, பூதப்பாண்டி-11.2, களியல்-2.4, கன்னிமார்- 18.6, கொட்டாரம்-18.4, குழித்து றை-14, மயிலாடி- 69.2, நாகர்கோவில்-34.8, சுருளோடு-18.6, தக்கலை- 23.2, குளச்சல்-4.4, இரணியல்-8, பாலமோர்- 38.2, மாம்பழத்துறை யாறு-19, திற்பரப்பு- 8.2, கோழிபோர் விளை- 37.6, அடையாமடை- 31, குருந்தன்கோடு-5.2, முள்ளங் கினாவிளை-18.6, ஆணைக் கிடங்கு-17.

Tags:    

Similar News