உள்ளூர் செய்திகள் (District)

தென்காசி மாவட்டத்தில் தொடரும் கோடை மழை- பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-03-31 09:05 GMT   |   Update On 2023-03-31 09:05 GMT
  • செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை நீடிக்கிறது.
  • அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

நெல்லை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இடி மின்னலுடன் மழை

சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை நீடிக்கிறது. நேற்று சிவகிரியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

பகலில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் மதியத்திற்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்கிறது.

செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்த நிலையில், நேற்று மாலை ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது.

மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணையில் 17 அடியும், கருப்பாநதியில் 24.61 அடியும், ராமநதி மற்றும் கடனா அணைகளில் 35 அடியும் நீர் இருப்பு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் திடீர் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 11.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் பகுதியில் 6.8 மில்லிமீட்டரும், அம்பையில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

நெல்லையில் லேசான கோடைமழை பெய்தாலும், பெரும்பாலான அணைகள் வறண்டு போகும் நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் வெப்பம் தணிவதால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 21.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதில் 15 அடி வரை சகதி மட்டுமே இருக்கும் என்பதால் அணையில் நீர்இருப்பு 9 அடி வரை மட்டுமே உள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.90 அடியும், சேர்வலாறு அணையில் 42.88 அடியும் நீர் இருப்பு உள்ளது. வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் 10 அடிக்கு கீழாக நீர் வறண்டு போய்விட்டது.

Tags:    

Similar News