என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள்"

    • பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
    • 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர விவசாயிகள் 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப் இன்று அறிவுறுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஞ்சாபில் அட்டாரி - வாகா எல்லை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பதால் அவர்கள் எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பை அதிகரிக்க பிஎஸ்எஃப் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

    அறுவடைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறாதுள்ளது. 530 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக அமிர்தசரஸ், டர்ன் தரன், ஃபெரோஸ்பூர் மற்றும் பைசலாபாத் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடையை முடிக்கும்படி குருத்வாராக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோதுமை அறுவடையில் 80% க்கும் அதிகமானவை நிறைவடைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடை செய்து, பின்னர் தீவனமாகப் பயன்படுத்த வைக்கோலை சேகரிப்பது மிகவும் சவாலானது என்று விவசாயிகள் கூறுகின்றனர். 

    • மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.
    • திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது.

    இடையக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக கத்தரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது.

    கூலி ஆட்களை கொண்டு விவசாய நிலங்களில் இருந்து கத்திரிக்காய் அறுவடை செய்து அதை தரம் பிரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை ஆனதால் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    இது குறித்து காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ராசியப்பன் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, வெங்காயம், பூசணி, சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதை தரம் பிரித்து அதிகளவு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புவோம்.

    இந்நிலையில் மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதனால் அதிக வரத்து இருப்பதால் சாரியாக விற்பனையாவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

    • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.

    தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    • பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
    • வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சியானது பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமமாகும். இங்கு மட்டும் பவானி ஆற்றை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.

    பவானி ஆற்றின் அருகே தனியார் ஒருவர் சாய தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சாய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சாய கழிவு ஆற்றில் கலந்து பவானி ஆறு, நொய்யல் ஆறு போன்று மாசுபடுவதுடன், பவானி ஆற்றை நம்பி உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பாசன பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பவானி ஆற்றில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாழாகும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பவானி ஆற்றங்கரையோரம் சாய சலவை ஆலை அமைக்க அனுமதி அளித்ததை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதற்கு, சாயசலவை ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசால் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து அரசை அணுகி பெரும் முயற்சியையும் உதவியையும் செய்ததற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை இன்று சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது,

    அரசு ஆலைக்கு தடை விதிக்கும் போது ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சென்று விடக்கூடாது என்பதற்காக அரசின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. எனது தனிப்பட்டது அல்ல.

    இந்த பகுதியில் விவசாயிகள் குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என மக்களில் ஒருவராக இருந்து இந்த பணியை செய்கிறேன். பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் இந்த ஆலை வராமல் இருக்க உங்களுடன் இருந்து பணியாற்றுவேன்.

    பவானி ஆற்றங்கரையோரத்தில் எந்த காலத்தில் சாய ஆலை வராது. இனி பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முயற்சி தான் வெற்றி பெற்றுள்ளது. 15.65 லட்சம் லிட்டர் தேவைப்படும் நிலையில் இங்கு வரும் ஆலை பெருந்துறை சிப்காட்டிற்கு செல்லலாம் என்றார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி ஆற்றில் சாய கழிவுகள் கலக்காமல் இருக்க விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வெற்றி என்ற இலக்கை எட்டுவது என்பது இன்றைய சூழலில் இமயமலையை எட்டி பிடிப்பது போன்று. இதற்கு பல்வேறு பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியை தான் விவசாய சங்கத்தினர் செய்தனர்.

    விவசாயிகளின் பெரும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முன் அனுமதி திரும்ப பெரும் நிலை 15 நாட்களில் விவசாயிகளின் முயற்சியால் கிடைக்கவுள்ளது.

    விவசாயிகள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்திக்கும்போது விவசாயிகளுக்கு ஊக்கத்தை தரும் வகையில் நல்ல பதிலை தந்தது வரவேற்கதக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? மதுரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்ததே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்காமல் செங்கோட்டையன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

    • 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும்.
    • ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 சதவீதம், உற்பத்தித்துறை 9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

    ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண் துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்திரை மட்டுமே கொண்ட சேவைத்துறை 53 சதவீத பங்களித்துள்ளது. 26 சதவீதத்தினரைக் கொண்ட உற்பத்தித்துறை 37 சதவீதம் பங்களித்துள்ளது.

    ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழும் வேளாண்துறை வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்களித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

    2024-25-ம் ஆண்டில் நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.17,23,698 கோடி என்றால், அதில் வேளாண்துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டும் தான்.

    அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38,304 மட்டும் தான்.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,29,826 ஆகும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது ஆகும்.

    வேளாண்துறை முன்னேற வேண்டுமெனில், ஆண்டுக்கு சராரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

    உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண்துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
    • மருத்துவ உதவிகள் வழங்க உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகளின் தலைவர் ஜெக்ஜித சிங் தல்லேவால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் தலைமையிலான பெஞ்ச் முன்பு, பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் புர்மிந்தர் சிங், பஞ்சாப் அரசு கனௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும், அரசியல் நோக்கம் இல்லாத ஒரு உண்மையான விவசாயிகளின் தலைவர் எனத் தெரிவித்தனர்.

    அத்துடன் "விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஐவரி டவர் மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றனர்.

    மேலும், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜபி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் கைவிட்டது.

    கடந்த 19-ந்தேதி மத்திய அரசு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சர்வான் சிங் பந்தேர், தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தலைவர்களை மொகாலியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஷம்பு மற்றும் கனௌரி போராட்டப் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.

    டெல்லியை நோக்கி விவசாயிகள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பேரணி செல்ல முடிவு செய்தனர். ஆனால் பாதுகாப்புப்படையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.
    • ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் நரசிம்ஹுலு ரங்காரெட்டி மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அறுவடை செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டதால் அதன் விலை வெகுவாக குறைந்துள்ளது.

    மஹபூப்நகர் உழவர் சந்தைக்கு பெட்டிகளில் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. 30 கிலோ எடையுள்ள ஒரு பெட்டியை ரூ.100-க்கு மேல் விற்க முடியவில்லை.

    இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளி பழங்களை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிட்டு வருகின்றன.

    இதே போல ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே அப்படியே விட்டுள்ளனர்.

    ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை எட்டியது. இதனால் ஏராளமான விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

    தற்போது அனைத்து விவசாயிகளும் தக்காளிகளை பயிரிட்டுள்ளனர். இதனால் தக்காளி அதிக அளவில் வரத்து ஏற்பட்டு விலை குறைந்துள்ளது. விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். 

    • மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.
    • போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    திருச்சி:

    விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அந்த மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

    இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

    அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன்உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர். இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சர் தகவல்.
    • விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இதற்கு கொள்கை வகுக்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, சட்டசபையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக வெளியான தகவல் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சரியான தரவுகளை சேகரிக்க உள்ளோம். விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு கொள்கை தயார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    மேலும், சரத் பவார் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் அஜித் பவார் கட்சிக்கு மாற இருப்பதாக தகவல் வெளியானது குறித்து கேட்க கேள்விக்கு, இது தொடர்பாக மீடியாவுக்கு அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்" என்றார்.

    பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஜெயந்த் பாட்டீல் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர், தான் விரக்தியில் உள்ளது. தன்னுடைய கருத்தில் இருந்து தவறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய நீர் இறைப்பானை மாநில த்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததற்காக வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2021-22-ம் ஆண்டில் வட்டியில்லா விவசாய கடன் அட்டை பயிர்க்கடன் வழங்கியதில் முதல் 3 இடங்கள் பெற்ற சங்க செயலாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் காட்டுப்பன்றிகளை விரட்டும் நுகர்மருந்துகளை விவசாய பயனாளிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பனை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தோட்டக்க லைத் துறையின் மூலம் பனைவிதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    இதில் கலெக்டர் பேசுகையில், நடப்பு நிதியாண்டின் ரபி பருவத்திற்கு விவசாயிகள் பயிர் செய்துள்ள பயிர்க ளுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 84 ஆயிரத்து 399 விவசாயிகளையும் கள ஆய்வு செய்து தகுதியுள்ள விவசாயிகளுக்கு 12-வது தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நடைபெறும் விவசாய பணிகளுக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் போது மான அளவில் இருப்பில் உள்ளது.

    விவசாய கடன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 25 ஆயிரத்து 290 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்ப ட்டுள்ளது. வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் விவசாயிகளிடமிருந்து வேளாண்மை தொட ர்பான பொதுவான கோரிக்கைகளுக்கு கருத்துக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அனைத்து வரத்துக் கால்வாய்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.
    • திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

    திருப்பூர்:

    மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 50ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். சுல்தான்பேட்டை, எம்.செட்டிப்பாளையம், அக்ரஹாரபுத்தூர், வேட்டுவபாளையம், மங்கலம் போன்ற பகுதிகளுக்கு மங்கலத்தில் ஒரு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. தங்களுக்கு தேவையான சான்றுகள் பெற பொதுமக்கள் தினசரி இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படும் நிலை உள்ளது. கட்டிட தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

    தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

    கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×