உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் விஷம் குடித்தது ஏன்? விடுதியில் போலீசார் அதிரடி விசாரணை

Published On 2022-08-24 08:15 GMT   |   Update On 2022-08-24 08:15 GMT
  • வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
  • இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

4 மாணவிகள்

இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு தகவல்

இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.

விஷம் குடித்தனர்

இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது

விடுதி ஊழியர்களிடம் விசாரணை

மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News