உள்ளூர் செய்திகள் (District)

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சை கருத்து: சீமான் மீது அரசு வக்கீல் புகார்

Published On 2024-10-24 05:45 GMT   |   Update On 2024-10-24 05:45 GMT
  • ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
  • தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.

திருச்சி:

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.

இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News