கொரோனா பரவல் ஒத்திகை-நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 160 படுக்கைகள் தயார்
- இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தமாக 1,100 படுக்கைகள் உள்ளன.
நெல்லை:
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.
இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது.
கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள சிறப்பாக தயாராகும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
அதன்படி தமிழகத்திலும் இன்று ஒத்திகை நடை பெற்று வருகிறது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஒத்திகை பயிற்சிகளை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் கூறுகையில், கடந்த முறை கொரோனா தொற்று பரவலின் போது அதற்கென ஒதுக்கப்பட்ட வார்டுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. சுமார் 160 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யூ. பிரிவுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர 2 ஆக்சிஜன் பிளான்டுகளும் ஏற்கனவே தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படுகைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்புகளும் தயாராகவே உள்ளது. கொரோனா பரவலையொட்டி தற்போது இந்த வார்டுகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 300 நோயாளிகள் வரை சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,100 படுக்கைகள் உள்ளன. அது வரையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் உள்ளோம் என்றனர்.