கோர்ட்டு உத்தரவுப்படி இன்று மறுவாக்கு எண்ணிக்கை
- வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
- மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
கோவை,
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் யூனியன் சின்னத் தடாகம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019 அன்று நடைபெற்றது.
இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020- அன்று எண்ணப்பட்டது.
அன்று இரவு 10 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், தெரி விக்கப்பட்டது.இதையடுத்து சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறி விக்கப்பட்டது.
ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்தார். மேலும் அவர் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதற்காக கலெக்டர் அலுவலக கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 ஓட்டுப்பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் குருடம்பாளையம் எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு வாக்குப்பெட்டிகளை திறந்து அதிகாரிகள் வாக்குகளை எண்ணினர்.
வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும், அதன்பின்னரே வெற்றி பெற்றவர் விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.