கடலூர் அண்ணா பாலத்தில் சாலையின் நடுவே விரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
- இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
- தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.