- விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
- மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
திருவாரூர்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் அந்த காவிரிநீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடியை ஆர்வத்துடன் தொடங்கினார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள தோலி, உதயமார்த்தாண்டபுரம், வடசங்கந்தி, இடையூறு, குன்னலூர், பாண்டி போன்ற பகுதிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து வந்த நிலையில் பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம்குறைந்து போனதாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர்.
இந்த நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தடைபட்டு உள்ளது பல போராட்டங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களில், பருவம் தவறி பெய்த மழையால் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில், வயல்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதாலும், பயிர்கள் சாய்ந்ததாலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.