கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
- காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர்.
- ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையிலிருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சுருக்கு வலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -
கடலூர் மாவட்டத்தில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள், முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை. ஆகையால் எங்களுடைய வல்லம் மற்றும் விசைப்படகுகளை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.