கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக காவலாளி திடீர் மாயம்
- கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை
- காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்,
கடலூர் ஆணைக்குப்பம் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவர் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் நேற்று இரவு சுப்பிரமணி வழக்கம் போல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உறவினர்கள் இன்று காலை கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரில் பார்த்தனர்.அப்போது சுப்பிரமணி காணவில்லை. மேலும் அவரது ஒரு செருப்பு மற்றும் அவரது செல்ஃபோன் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக வெளிபுறத்தில் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுப்பிரமணியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கடலூர் புது நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காவலாளி சுப்பிரமணி எங்கு சென்றார்? அவரது நிலை என்ன? என்பதனை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.