கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற திருநங்கை
- திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேரில் வந்தனர். அப்போது ஒரு திருநங்கை திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், அதிர்ச்சியடைந்து திருநங்கையிடம் இருந்த மண்எண்ணை கேனை பிடுங்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் பாலூர் நடு காலனியை சேர்ந்த வினோதினி (வயது 26) திருநங்கை என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கை வினோதினி வினோத்குமாராக இருந்தபோது, நத்தப்பட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலர்களாக இருந்து வந்துள்ளனர்.
அந்த வாலிபர் கூறிய காரணத்தினால் வினோத் குமார், திருநங்கையாக மாறினார். தற்போது அந்த வாலிபர் திருநங்கை வினோதினியை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். எனவே, இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக திருநங்கை வினோதினி போலீசாரிடம் கூறினார். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.