உள்ளூர் செய்திகள்

பூக்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

திருமருகல் பகுதியில் சாமந்திப்பூ சாகுபடி

Published On 2023-03-07 09:20 GMT   |   Update On 2023-03-07 09:20 GMT
  • கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம்.
  • விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம், அகர கொந்தகை, ஆலத்தூர், ஏர்வாடி, கீழபூதலூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை மூலமாக 100 சதவீதம் மானியத்துடன் சாமந்திப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இதுவரை நெல் உளுந்து பயிறு பருத்தி உள்ளிட்ட சாகுபடிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சோதனை முறையில் மாற்று பயிராக சாமந்திப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

இதற்காக நாற்றுகள் இடுபொருள்கள் உரம் உள்ளிட்ட அனைத்தும் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரை முழு மானியத்துடன் வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலர் வித்யா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம் கிடைப்பதாகவும் பறிக்கப்படும் பூக்களை காரைக்கால் நாகப்பட்டினம் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வணிகர்கள் தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்வதால் விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் முறையாக சோதனை அடிப்படையில் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது நல்ல விளைச்சல் இருப்பதாலும் விற்பனை செய்வதில் எளிமையை ஆக இருப்பதாலும் இதனை மாவட்ட முழுவதும் அனைத்து கிராமங்களிலும் விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News