- விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.
- பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் தொடங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதை பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி 10 ஏக்கர் மற்றும் மாப்பிள்ளை சம்பா 5 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டிணம் ஆகிய அரசு விதை பண்ணைகளில் தலா 15 ஏக்கர் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழியில் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்து அதன் மூலம் கிடைக்கும் விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்குவதற்கு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 5 ஏக்கர் நில பரப்பில் மாப்பிள்ளை சம்பா எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்ப ட்டுள்ளது.
அடுத்த கட்டமாக தூயமல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கர் பரப்பளவில் எந்திர நடவு முறையில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றுகளை பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நெடும்பலம் அரசு விதை பண்ணையில் துவங்கப்பட்டது.
இப் பணியை மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொ) ரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாய் நாற்றங்காலில் பயன்படுத்த ப்படும் விதை நெல்லில் சூடோமோனஸ் மற்றும் உயிர் உரங்கள் கலந்து விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தினை பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி செய்து காட்டினர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை ஏழுமலை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன் கலந்து கொண்டனர்.