களக்காடு அருகே இடுகாடு சேதம்- 4 பேர் மீது வழக்கு
- அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை விசுவாசம் கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார்.
- விசுவாசம் உள்ளிட்ட 4 பேர் 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், வேதநாயகபுரத்தை சேர்ந்த கிராம மக்களுக்கான இடுகாடு பெருமாள்குளம் கழுத்தறுத்தான் பொத்தை அருகே உள்ளது.
இதில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு பெருமாள்குளத்தை சேர்ந்த விசுவாசம் (வயது 70) அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார். இதனால் அங்கு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் போது அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே விசுவாசம், அவரது மகன் யோவான் (40), அதே ஊரை சேர்ந்த ராஜாமணி மகன்கள் சதிஷ் (26), ஆல்பர்ட் (29) ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது. இதுபற்றி வேதநாயகபுரம் ஊர் நாட்டாமை நாராயணன் (31) களக்காடு போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக விசுவாசம், அவரது மகன் யோவான், சதிஷ், ஆல்பர்ட் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யோவானை கைது செய்தனர்.