தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி
- மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.
- தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
கருணாநிதியின் மறைவின் போதே, அவர் உடல்நலக்குறைவோடுதான் இருந்தார். அதன் பிறகும் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவ்வப்போது கோபாலபுரத்துக்கு சென்று தாயாரை அவர் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயார் தயாளு அம்மாளை பார்ப்பதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் வந்தார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அருகில் இருந்து தாயாரை கவனித்துக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்துவிட்டு, மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.