உள்ளூர் செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம் மேலும் சில நாட்களுக்கு வைக்க முடிவு

Published On 2023-06-06 08:59 GMT   |   Update On 2023-06-06 08:59 GMT
  • இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.
  • மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம் செய்யப்பட்டிருந்தன.

ஊட்டி,

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தை மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 19-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்தது.

மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் 70 ஆயிரம் கார்னேசன் மலர்களால் ஆன மயில் உருவம், 80 ஆயிரம் மலர்களான ஊட்டி 200 வடிவம், 125வது மலர் கண்காட்சி வடிவம் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

இது தவிர நுழைவு வாயிலில் 10 அலங்கார வளைவுகள், செல்பி ஸ்பாட்டுகள், 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர்களை கொண்ட மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த மலர் அலங்காரங்களை கடந்த இரு வாரமாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

அதேசமயம் மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு வில்லியம், மேரி கோல்டு உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறையாமல் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு மாடங்களில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த வாரம் இறுதி வரை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News