உள்ளூர் செய்திகள்

சூலூரில் வடமாநிலத்தவர்களை தடுத்து நிறுத்தி மிரட்டல்; 4 வாலிபர்கள் கைது

Published On 2022-06-20 09:53 GMT   |   Update On 2022-06-20 09:53 GMT
  • கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
  • அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

சூலூர்:

சூலூர் அருகே அரசூர் பகுதியில் செந்தில் கோழிப் பண்ணை உள்ளது. இங்கு பொத்தியாம ்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சதாசிவம் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் வாராவாரம் அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வேனில் சந்தைக்கு சென்று வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தனர்.

அரசூர் அருகே அன்னூர் செல்லும் பாதையில் வரப் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, வடமாநி லத்தவர்களை, குடிபோதையில் 4 வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாசமான வார்த்தைகளை பேசினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகால் திட்டி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர்கள் சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர்கள் மேற்பார்வையாளர் சதாசிவத்திடம் தெரிவித்தனர். அவர் சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தவர்களை மிரட்டியது, சிவானந்தபுரம் சங்கர் அப்பன் தோட்டத்தை சேர்ந்த குமார்(38), காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த சிவகுமார்(33), சரவணம்பட்டி ஜனதா நகரைச் சேர்ந்த ஆனந்தன் (37), சரவணம்பட்டி பெரிய கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஹரிஹரன்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News