கூடலூரில் ரூ.8.2 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு
- பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
- தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூா் பகுதியில் பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பழங்குடிகளுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2022-2023 நிதியாண்டில் கூடலூா் நகராட்சியில் 74 வீடுகளும்,நெல்லியாளம் நகராட்சியில் 126 வீடுகளும், 2023-2024 நிதியாண்டில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 25 வீடுகளும் கட்ட நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.35.50 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.32.65 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள், ஸ்ரீமதுரை ஊராட்சியில் கூடூா் பழங்குடியினா் காலனியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.64.42 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளும், தேவா்சோலை கொட்டமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33.05 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, கூடலூா் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரபிரபு, கூடலூா் தாசில்தாா் ராஜேஸ்வரி, ஓவேலி பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவா் சுனில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.