புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நவதிருப்பதி தலங்களில் பக்தர்கள் வழிபாடு
- நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
- 4-வது சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்திருப்பேரை:
புரட்டாசி மாதம் சனிக் கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வா திருநகரி, தென்திருப்பேரை சுற்று வட்டாரப்பகுதியை சுற்றி நவத்திருப்பதி பெருமாள் கோவில்கள் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்த கோவில்கள் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும். அதன்படி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்த பெருமாள், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்த லோசனர், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருபேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய 9 நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பல்வேறு வாகனங்களில் வருகை தந்த பக்தர்கள் குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லையில் இருந்து நவதிருப்பதி பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது தரிசனம் மற்றும் ரூ.10 என சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் செய்து இருந்தனர்.