இடுவாய் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் வழங்கினார்
- அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.
- 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம்.
திருப்பூர் :
திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வினீத் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் திட்டத்தின் கீழ் "தேசிய குடற்புழு நீக்கும் தினம்" திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய 2.04 பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம் படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்ட்சோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.
காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இமமாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.
1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வரை)அல்பெண்டசோல் 1 மாத்திரைகள் வழங்கப்படும்.
எனவே குழந்தைகள் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.