நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு
- சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர்.
- போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம்.
சென்னை :
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான 'டிரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்' உடற்கூறியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், நரம்பியல் துறை சார்பில் போலீசாருக்கு முதுகு வலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்க புதிய பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரியின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மேடையில் கூறியதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி 1,000 படுக்கை வசதிகளுடன், 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு ஆஸ்பத்திரி. ஏனென்றால் சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மை கொண்டுள்ள டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்.
எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது. அதற்காக 4 ஆண்டுகள் முயற்சித்தேன் ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் டாக்டராக வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஆரோக்கியமான விஷயமாகும்.
பொதுவாகவே போலீஸ் வேலையில் உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு, உடல் வலி அதிகம் ஏற்படும். சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும் 3-வது திங்கட்கிழமைகளில், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக தொடங்கப்படும் முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.