உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

Published On 2023-03-29 04:59 GMT   |   Update On 2023-03-29 04:59 GMT
  • பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும்.
  • பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது.

சென்னை:

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், தற்காப்பு முறைகள், குடும்ப வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சைலேந்திரபாபு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மீதான வழக்குகளில் 90 நாட்களில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆயிரத்து 711 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 11 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வழக்குகளில் குற்றவாளிகள் 5 ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். 219 வழக்குகளில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனைகள் பெற்று தரப்பட்டதால்தான், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது. ஒருவேளை அவ்வாறு பகிர்ந்து, அந்த தகவல்களை வைத்து பெண்களை யாரும் மிரட்டினால் உடனே அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க தற்போது 37 மாவட்டங்கள், 9 பெரிய நகரங்களில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கலைச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News