உள்ளூர் செய்திகள்

தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த முகாமில் 112 மனுக்கள் மீது உடனடி தீர்வு

Published On 2023-07-27 09:47 GMT   |   Update On 2023-07-27 09:47 GMT
  • மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  • முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.

தருமபுரி,


தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முகாமில் 112 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் புகார் மனுக்கள் கொடுக்காமல் ஏராளமான பொதுமக்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக போலீசாரிடம் நேரில் முறையிட்டனர். அவர்களுக்கு போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த குறை தீர்க்கும் முகாம்களில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு, நிலத்தகராறு தொடர்பாக புகார் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News