திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு என புகார் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
- திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் நடைபெற்றது.
- தி.மு.க உறுப்பினர்களுடன் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முடிவில் இயல்புகூட்ட பொருள் 76, அவரச கூட்ட பொருள் 16 என மொத்தம் 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, கமிசனர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது.
அதன்பிறகு உறுப்பினர்கள் பேசிய விபரம் வருமாறு,
ஜான்பீட்டர்: தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களின் பசியை போக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்தாலும் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி தொடர வேண்டும் என்றார்.
தனபாலன் : தி.மு.க அரசின் சாதனைகளை கூறுவதென்றால் பேசிக்கொள்ளுங்கள். அதற்காக மத்திய அரசை குறைகூறி பேசவேண்டாம் என்றார்.
பாஸ்கரன்(அ.தி.மு.க): 34-வது வார்டில் எந்தவித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. குடிநீர், சாக்கடை வசதிகள் கூட இல்லை. அ.தி.மு.க உறுப்பினர் வார்டு என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்றார்.
ஜோதிபாசு(சி.பி.எம்): துப்புரவு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்சம் ரூ.509 கூலி வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு நிர்ணயித்த கூலியை வழங்காமல் துப்புரவு தொழிலாளர்களை ஏமாற்றுவது ஏன்? என்றார்.
மார்த்தாண்டன்(தி.மு.க): கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.32 கோடி வரிப்பற்றாக்குறை உள்ளது. இதனால் பல்வேறு வார்டுகளில் அடிப்படை பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் 6 மாதங்கள் கழித்துதான் பணிகளை மேற்கொள்ள முடியும்.
ராஜ்மோகன்(அ.தி.மு.க): கடந்த 10 ஆண்டுகளில் திண்டுக்கல் மாநகராட்சி எந்தஅளவு வளர்ச்சி பெற்றது என்பதை தி.மு.க உறுப்பினர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களிடம் கேட்டாலே தெரிந்துவிடும். பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போதைய தி.மு.க மாநகராட்சியில் சாக்கடை கழிவுநீரை கூட அகற்ற நடவடிக்கை எடுக்காததால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது என்றார்.
ஜான்பீட்டர்: தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது நாய்களுக்கு கருத்தடை ஆப்ரேசன் செய்யப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் 500 நாய்கள் இருந்த நிலையில் தற்போது ஐநூற்றி 300 நாய்கள் பெருகிவிட்டது என்றார். இதனால் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். பின்னர் சுதாரித்துக்கொண்டு 5300 நாய்களாக உள்ளது என்றார்.
தனபால்: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுகுறித்து வெள்ளைஅறிக்கை வெளியிடவேண்டும் என பலமுறை தெரிவித்தேன். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த அறிக்கையும் அளிக்காததது ஏன்?
ராஜப்பா(துைணமேயர்): அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் தொகைக்கு விலை கேட்டவர்களுக்குத்தான் கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஒரு கடைக்கு ரூ.18ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதைவிட கூடுதல் தொகைக்கு கேட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறைவாக கேட்டவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றார்.
தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்களுடன் அ.தி.மு.க, பா.ஜ.க கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முடிவில் இயல்புகூட்ட பொருள் 76, அவரச கூட்ட பொருள் 16 என மொத்தம் 92 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.