திண்டுக்கல் மாவட்டத்தில் 2900-க்கும் அதிகமான இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
- தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து திண்டுக்கல்லில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
- அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சராசரியாக தினசரி பாதிப்பு 2000-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 30 முதல் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி வரை 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 19,21,688 நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1,789,301 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 68,302 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 2.7 லட்சம் நபர்கள் 2-ம் தவணை செலுத்துவதற்குரிய தவணைதேதி கடந்த பின்னும் தடுப்பூசிசெலுத்தாமல்உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 11.7 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை தவணைதடுப்பூசி (3-வது தவணை தடுப்பூசி) செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 2900க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பலர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வருவதாலும், உயிரிழப்பை தடுப்பதை கருத்தில் கொண்டும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகம் தெரிவித்தார்.