கடையநல்லூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் நேரடி சேர்க்கை 23-ந்தேதி வரை நீட்டிப்பு- கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
- 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
- அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தொழிற்பயிற்சி நிலையம்
கடையநல்லுர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0-ல் 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான மேம்படுத்தப்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவு களுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, 14 வயது முதல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையநல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அணுகவும்.
கல்வி உதவித்தொகை
பயிற்சியில் சேர்பவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ. 750, அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் தி்ட்டத்தின் கீழ் ரூ. 1,000 கூடுதலாக வழங்கப்படும். சைக்கிள், சீருடைகள், தையல் கூலி, காலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும்.
மேலும் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உள்ளது. 10-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் 8-ம் வகுப்பு முடித்து இரண்டாண்டு தொழிற்பிரிவு களில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10- ம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மீனாட்சி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் அருகில்) தொலைபேசி எண் 04633-290270-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.