தருமபுரி விதை விற்பனை நிலையங்களில் இயக்குநர் திடீர் ஆய்வு
- சான்று பெற்ற விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என விசாரணை.
- உரிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கவும், ராசயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.
தருமபுரி,
சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி தருமபுரி வட்டாரத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது விதை விற்பனை நிலையங்களில் முறையான ஆவணங்களுடன் கூடிய நல்ல தரமான சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விதை விற்பனை உரிமம் பெறப்பட்டுள்ளதா?உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, விற்பனை நிலையத்தின் முன் விதை விற்பனை பலகை உள்ளதா, அதில் விதை இருப்பு, விலை ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்கு தெளிவாக தெரியும்படி உள்ளதா எனவும், விதைகளின் கொள்முதல் பட்டியல், விதை பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்று ஆகியவை உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது விதை மாதிரிகளின் முளைப்புதிறன், பரிசோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை மற்றும் பிறரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பிறகு நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள வெற்றிலைக்காரப் பள்ளம் கிராமத்தில் உள்ளள அங்ககப்பண்ணையை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அங்கக இடுபொருட்களான பஞ்ச காவியா, ஜீவாமிர்தம், இஞ்சி பூண்டு கரைசல், மீன்அமில கரைசல் ஆகியவற்றை முறையாக தயாரிப்பு செய்கிறார்களா என விவசாயிடம் கேட்டு அறிந்தார்.
பிறகு அங்ககப் பண்ணையை மேற்பார்வையிட்டு உரிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கவும், ராசயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். விதை ஆய்வு துணை இயக்குநர்சங்கர், விதைப்பரிசோதனை அலுவலர் அருணா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவசங்கரி,விதை ஆய்வாளர்கள், விதைச்சான்று அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர் விதைப்பரிசோதனை நிலையம் ஆகியோர் உடன் இருந்தனர்.