ஆலங்குளம் அரசு கால்நடை மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் வினியோகம் -நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- மாட்டிற்கு சினை பிடிப்பதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை ரித்தீஸ் என்பவரை அனுப்பி வாங்கி உள்ளார்.
- மாத்திரைகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.
ஊட்டச்சத்து மாத்திரை
இவர் வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அதில் ஒரு மாட்டிற்கு சினை பிடிப்பதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை ஆலங்குளம் அரசு கால்நடை மருத்துவமனையில் ரித்தீஸ் என்பவரை அனுப்பி வாங்கி உள்ளார்.
வீட்டில் வந்து பார்த்த போது மாத்திரைகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் மாத்திரை அட்டையில் காலாவதி தேதி 2020ம் ஆண்டு முதல் 2022ம்ஆண்டு பிப்ரவரி வரை அச்சிடப்பட்டிருந்தது.
காலாவதியான மாத்திரை
எனவே காலாவதியான மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. இதேபோன்று ஆலங்குளம் அரசு கால்நடை மருத்துவமனையில் தேதி முடிந்த தரமில்லாத மாத்திரைகள், ஊட்டச்சத்து கால்நடை உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், கால்நடையை வைத்திருக்கும் விவசாயிகள் அருகில் உள்ள சிறு கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அப்பகுதியினர் ஆதங்கப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.