உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.  

கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் 7-ந்தேதி தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம்- அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Published On 2022-08-05 09:25 GMT   |   Update On 2022-08-05 09:25 GMT
  • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்தில், கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்துவது குறித்தும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும், இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்துவது குறித்தும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி வடக்குமாவட்ட தி.மு.க. சார்பில் வரும் 7-ந்தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவுநாளை வடக்கு மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் தவறாமல் கடை–பிடித்திட–வேண்டும். அன்று காலை 8மணிக்கு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலைஞர் அரங்கம் வரை மவுன ஊர்வலம் நடக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுத்திடவும், தி.மு.க. அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்து சொல்லிடவும் வடக்கு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்களை நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தெருமுனை கூட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினர் சொல்லும் உண்மைக்கு புறம்பான செயல்களுக்கு எல்லாம் கழக தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த வேகத்தை அதிகப்படுத்திடவேண்டும். தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் கழகத்திற்காக உழைத்திட–வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், அகில உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழகத்தில் நடத்திட சிறப்பாக ஏற்பாடு செய்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க.வின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News