உள்ளூர் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் உபயோகிக்க கூடாது : தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உரிமம்பெற வேண்டும் - நெல்லை கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-10-15 09:08 GMT   |   Update On 2022-10-15 09:08 GMT
  • தயாரிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புதுறையில் உரிமம் பெற்று விநியோகம் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  • சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவுதயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பலகாரம்

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமணமண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, காரவகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்புகார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புதுறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவுதயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களில் தயாரிப்பாளாரின் முழு முகவரி, உணவுபொருளின் காலாவதியாகும் காலம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உரிமம்

உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது - பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http:/foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவுபாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் உணவு (இனிப்பு மற்றும் கார வகைகள்) தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான உணவு புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணிற்கு

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News