உள்ளூர் செய்திகள்

வேகவதி ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கியது- பாலங்களை உடைக்காமல் நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2023-09-25 06:41 GMT   |   Update On 2023-09-25 06:41 GMT
  • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
  • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News