ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
- மேல்மலையனூர் அருகே ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
- மந்தைவெளியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை செய்யப்பட்டு வண்ணப் பொடிகள் மற்றும் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் கடந்த 25-ந் தேதி அலகு நிறுத்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.
தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பிற்பகல் மகாபாரத சொற்பொழிவும் இரவில் நாடகமும் நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகராரழ்ச்சியான இன்று துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மந்தைவெளியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை செய்யப்பட்டு வண்ணப் பொடிகள் மற்றும் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.பின்பு 18-ம் நாள் தெருக்கூத்து நடத்தப்பட்டு பீமன் வேடமணிந்தவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்தார் பின்பு அங்கிருந்து வெளியேறிய சிவப்பு திரவத்தை எடுத்து பாஞ்சாலி வேடமணிந்தவர் கூந்தலிலும், பாஞ்சாலி அம்மன் சிலையில் உள்ள கூந்தலிலும் தடவி கூந்தலை முடிந்தனர்.
பின்பு துரியோதனன் சிலையை 3 முறை வலம் வந்தவுடன் அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.