உள்ளூர் செய்திகள்

கோவையில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் அதிகாலை நேரும் விபத்துகள்

Published On 2023-09-06 09:12 GMT   |   Update On 2023-09-06 09:12 GMT
  • காலை 8 மணியில் இருந்து இயங்குவதால் வாகனஓட்டிகள் பாதிப்பு
  • இரவு நேரத்தில் புறப்பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகள் அதிவேகத்தில் பறப்பதால் பாதசாரிகள் அவதி

குனியமுத்தூர்,

கோவையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி விபத்துக்களும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து சாலைக ளில் அன்றாடம் பயணி க்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு போக்கு வரத்து சிக்னல்கள் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் இல்லையென்றாலும் கூட வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, சாலைகளை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து சிக்னல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் காலை 8 மணியில் இருந்துதான் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருசில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் அரங்கேறி வருகிறது.

கோவையில் வியாபாரிகள் காலைநேரத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையில் காய்கறி வாங்கி வீடு திரும்பும் வாகனங்களையும் பார்க்க முடி கிறது.

அதிகாலையில் டியூசன் செல்லும் மாணவ மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து சாலையில் அதிகாலை நேரத்தில் கார்கள், பஸ்கள் மற்றும் நடைப்பயிற்சி செல்வோரையும் ஒரே நேரத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.

கோவையில் அதிகாலை நேரத்தில் சிக்னல்கள் இயங்காததால் அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சாலையை கடக்க முற்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதியில் சிறு-சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் புறப் பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகளும் அத்துமீறிய வேகத்தில் செல்கின்றன. அத்தகைய நேரத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

சென்னையில் காலை 6 மணி முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. எனவே சென்னையை போல கோவையிலும் அதிகாலை 6 மணிக்கு சிக்னல் இயக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலைகளில் சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.

போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News